நாளை நடந்தேறும்
நாளை அது நடந்தேறும்
(அவன் ஒரு தமிழ்க்கவிஞன். ஈழத்தை நேற்றுவரை ஊடகங்களில் மட்டுமே பார்த்தவன். முதன்முறையாக ஈழமண்ணில் காலடிவைக்கிறான். ஆகாய வெளியெங்கும் சாம்பலாய்க்கருகிய தமிழர்களின் புகைமண்டலம் இன்னும் அப்படியே இருக்கிறது. எல்லாத்திசையிலும் பிணவாடை. அவன், நாசியையும் இமைகளையும் இறுக்கப் பொத்திக்கொண்டு நடக்கிறான். எதிரே ஒரு குழந்தை அழும் குரல்.வேதனையோடு பார்க்கிறான். அதனருகே போய் வீரியமாய்க் கேட்கிறான். அவன் பேனா பேசத்தொடங்குகிறது....)
ஏனழுகிறாய்க் குழந்தாய்?
ஆறேழு நாட்களுக்குமுன்
உன் தாயும் தகப்பனும்
உயிரோடு எரிக்கப்பட்டார்களாமே
அப்போதுகூட நீ
அழுததில்லையாமே
இப்போது ஏனழுகிறாய்?
பயந்தவர்களின் கூடாரம்
பரப்பிய பொய்களை
நம்பிவிட்டாயா?
அவன்-
வெறும் அத்தியாயமல்ல
ஒரே இரவில் முடித்துவிட.
சில தலைமுறைகளின்
வரலாறு!
அவன் ஒரு யுகத்தீ!
ஈரமற்றவர்களின் எச்சிலா
அவனை
அணைத்துவிட முடியும்?
போர்த்தமிழின்
ஆயுத எழுத்து அவன்.
பீரங்கிக் குண்டுகளே
பட்டுத் தெறிக்கும் அவனைத்
துளைத்துவிடும் கனவு
தோட்டாக்களுக்கா
கைகூடும்?
அவனை அழித்துவிடும்
ஆயுதசூட்சுமம்
அறிவியலுக்கே
இன்னும் அகப்படவில்லை.
அழாதே குழந்தாய்....!
இன விடுதலையின்
பிரகடனப் பத்திரத்தில்
கையெழுத்திடாமல்
மரண சாசனத்தில்
அவன் பேனா மண்டியிடாது!
பூனையின்
பிணத்தைக் காட்டி
'புலியைக் கொன்றுவிட்டோம்'
என்னும்
ஓநாய்களின் கூச்சலை
ஒதுக்கிவிட்டுக் கேள்
புலியின் உறுமல் கேட்கும்!
இந்த நூற்றாண்டின்
ஒரே மனித அதிசயம்
அவன்.
அவனோர் விசித்திரப் போராளி.
அவனுக்கு
சிறகுகளும் உண்டு.
செதில்களும் உண்டு!
தனிமனிதன் அல்ல
ஒரு மாபெரும்
கட்டமைப்பின்
சிற்பி அவன்!
ஆயுதம் ஏந்தினான்.
அவன் தோட்டாக்களுக்கு
இரையானது
ஆட்டுக்குட்டிகள் அல்ல.
ஓநாய்களும்
நரிகளும்தான்!
களையெடுப்பது
எப்படி
கொலைக்குற்றமாகும்?
அந்த வேங்கையின்
வேட்டைப் பட்டியலில்
இந்திய நரியும்
ஒன்று உண்டு.
அதனாலேயே
இந்தியம்
அவன் இறந்துவிட்டதாக
கொண்டாடுகிறது
கொண்டாடட்டும்.
நீ அழாதே குழந்தாய்!
அவன் வருவான்.
காவுகொடுக்க வேண்டிய
கூமுட்டைகள்
இங்கே
குவிந்து கிடக்கின்றன
ஒவ்வொன்றாய் அல்ல.
ஒட்டுமொத்தமாய்
உடைத்தெறிய
சிரித்துக்கொண்டே
அவன் வருவான்!
'நானிருக்கிறேன்
உன்னைக் கரைசேர்க்க'
என்று
இந்துமகா சமுத்திரத்தின்
அந்தப் புறமிருந்து
நாளுக்கொரு
கரைவேட்டிகள் ஓலமிடும்
நம்பாதே.
மகுடங்களைக்
கழட்ட மறுக்கும்
அந்த
மண்டை ஓடுகளுக்குள்
உனக்கான எதிர்காலத்தைச் சிந்திக்கும்
மூளை இல்லை.
உனக்கான நாளைகளை
வரையறுக்க
அவன் ஒருவனால்
மட்டுமே முடியும்.
வருவான்!
கொக்கரிக்கும் காடைகளை
எச்சரிக்கையாய்
இருக்கச்சொல் குழந்தாய்.
எந்த நேரத்திலும்
அவன் வரக்கூடும்!
இதுவரை
அவனால் தண்டிக்கப்பட்டவர்களை
விடவும்
மன்னிக்கப் பட்டவர்களே அதிகம்.
இனி -
நன்றிகெட்டவர்களின்
நெற்றிப் பொட்டுகளை
அவனின்
மனிதாபிமான துப்பாக்கி
மன்னிக்காது!
கந்தக குண்டுகள்
பொசுக்கிய உயிர்கள்
எத்தனை?
எந்திரக்கருவிகள்
நசுக்கிய உடல்கள்
எத்தனை?
எல்லாக் கணக்கும்
அவனுக்கு தெரியும்.
சாம்பலாகிப்போன
ஒவ்வொரு உயிருக்கும்
ஈரேழு மடங்காய்
அவன் ஈடுகட்டுவான்!
பாதுகாப்பு வளையத்திற்குள்
அடைபட்டுக் கிடக்கும்
உன் இனத்திற்குச்
சொல்லிவை.
கடைசித் தமிழனும்
சாம்பலாகும் வரை
அவன் காத்திருக்கமாட்டான்.
விரைவில் வருவான்!
தனியாக அல்ல.
தடயமே இல்லாமல்
அழிக்கப்பட்டதாய்ச்
சொல்லப்பட்ட
அவன் தளபதிகளோடு!
ஒரேநாள் யுத்தத்தில்
விட்டுக் கொடுத்த
உரிமைகளையெல்லாம்
தட்டிப் பறிப்பான்!
மறுநாள் -
அவன் காலடியில்
மல்லார்ந்து கிடந்து
உயிர்ப்பிச்சை கேட்கும்
ரத்தக்காட்டேரியின்
ஒளிக்கலப்பில்லாத
உண்மையான முகமும்
அவன் தோட்டாக்கள்
சல்லடையாக்கிய
காட்டேரியின் சடலமும்
ஒவ்வொரு ஊடகங்களிலும்
வெளியாகும்.
அதே தினத்தில் -
நந்திக்கடலின் கரைகளில்
காட்டிக்கொடுத்தே
கௌரவம் பெற்றவனின்
நிர்வாணப் பிணமும்
நீந்தும்.
அப்போது
நீ அடையாளம் காட்டு.
இவன்தான்
இவன்தான் எங்கள்
'இனத்துரோகி' என்று!
அவன் துப்பாக்கி
முழங்கி முடித்து
மௌனமான பிறகு -
அடைபட்டுக் கிடக்கும்
கூட்டம்
சுதந்திர சிறகுகட்டி
அவனை நோக்கி
பறந்து வரும்.
அவன் -
தோளில் உன்னைத்
தூக்கியபடியே
அந்தக் குயில்களைநோக்கி
வீரநடை போடுவான்!
நீ கைகொட்டிச் சிரிப்பாய்.
அந்தச் சிரிப்புச்சந்தத்தில்
தமிழீழத்தின் 'தேசியகீதம்' பிறக்கும்!...
-நேசன்
கருத்துகள் இல்லை