பிரபாகரனியம் (பகுதி 03)


துப்பாக்கி வாங்க ஏழு நண்பர்களும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பணங்களையெல்லாம் பிரபாகரனிடம் கொடுப்பார்கள். பிரபாகரனும் அதை சேமித்து வைப்பார்.. பிரபாகரன் எங்கெல்லாம் புரட்சி போராட்டங்கள்
பற்றி புத்தகங்கள் கட்டுரைகள் வருகிறதோ அவற்றையெல்லாம் எடுத்து சேமித்து வைத்துக்கொள்வார்.

துப்பாக்கியை தேடித்திரிந்த 14 வயது பிரபாகரன் ஒரு நண்பர் மூலம் ஒரு செய்தியை கேள்விப்படுகிறார். பருத்தித்துறை கடற்கரைக்கு அருகாமையில் ஒரு சண்டியர் “சம்பந்தன்” என்பவர் தனது துப்பாக்கியை விற்கப்போவதாகவும் அதன் விலை 150 இலங்கை ரூபா எனவும் கேள்விப்படுகிறார். கேள்விப்பட்டதுதான் தாமதம் உடனே 7 பேர் குழுவில் ஒருவனை அழைத்துக்கொண்டு பருத்தித்துறையை நோக்கி பஸ் ஏறுகிறார்.

துப்பாக்கியின் விலை 150 ரூபா என கேள்விப்பட்டிருந்தார். சரி பணத்துக்கு எங்கே போவது??. ஏழு பேரும் சேர்ந்து சேர்த்த காசு வெறும் 40 ரூபா மட்டுமே. இன்னும் 110 ரூபாய் வேண்டும்.. என்ன செய்யலாம்?. உடனே பிரபாகரனின் பெரிய அக்காவான ஜெகதீஸ்வரி கல்யாணத்திற்கு பரிசாக தனக்கு கிடைத்த தங்க மோதிரம் அவர் நினைவுக்கு வருகிறது. சரி அதை வித்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்து அதை 70 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார். இப்போது கையில் 110 ரூபா இருக்கிறது.. இதுகும் போதவில்லையே? என்ன செய்வது. இன்னமும் 40 ரூபாய் தேவைப்படுகிறதே?..

ஆனால் அவர்களால் அந்தப்பணத்தை திரட்ட முடியவில்லை. சரி போகட்டும்… பேரம் பேசிப்பார்க்கலாம். அவர் விலையைக்குறைக்க மறுத்தால் கெஞ்சிப்பார்க்கலாம் அப்படியும் தரவில்லை என்றால் இப்போது 110 ரூபா தருகிறோம்.. மிச்சப்பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிக்கிறோம் என பேசிப்பார்க்கலாம் என முடிவு செய்கிறார்கள். சரி அதற்கும் தர மறுத்தால் எங்கள் போராட்ட இலட்சியத்தை சொல்லிக்கேட்டுப்பார்க்கலாம் எங்கள் உணர்வைப்பார்த்த பின்பு கட்டாயம் அவர் துப்பாக்கியை தந்து விடுவார் என்ற எண்ணத்தில் பயணிக்கிறார்கள்.

அவரிடம் சென்று துப்பாக்கியை விற்பதாக கேள்விப்பட்டதாகவும் அதை வாங்கவே வந்ததாகவும் சொல்கிறான் 14 வயது சிறுவன் பிரபாகரன்.. சண்டியன் சம்மந்தனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏற அவர்கள் இருவரையும் அடித்து விரட்டத்தான் நினைக்கிறார்.

ஆனால் பிரபாகரனின் துப்பாக்கி மீதான வெறியும் ஆர்வமும் அவரை தடுத்து நிறுத்துகிறது… பிரபாகரன் முடிந்தவரை கெஞ்சிப்பார்கிறார். ம்ஹூம் முடியவில்லை.. சம்மந்தனை சம்மதிக்கவைக்க முடியவில்லை..

சரி பரவாயில்லை. நீங்கள் விற்காவிட்டாலும் பரவாயில்லை.. அதை ஒரு முறை பார்க்கவாவது அனுமதி தாருங்கள் என்கிறான். சில நிமிடங்கள் யோசனையின் பின்பு சரி சரி இது விளையாட்டுத்துப்பாக்கி அல்ல. நிஜத்துப்பாக்கி.. தொட எல்லாம் அனுமதி இல்லை. சும்மா பார்க்க விரும்பினால் மட்டும் பாருங்கள், தொட்டு பார்க்க அனுமதி கிடையாது… பிரபாகரன் கண் முன்னே துப்பாக்கி. ஆனால் தொட்டுப்பார்க்க இயலாது.. பிரபாகரனுக்கு அழுகையே வந்துவிட்டது. வெறித்துப்பார்க்கிறான்.. சண்டியன் சம்மந்தன் கண்டிப்பாக சொல்கிறார். துப்பாக்கி எல்லாம் அப்புறம் பழகலாம். முதலில் படிப்பை கவனியுங்கள் என்று… ஏமாற்றத்துடன் திரும்புகிறார் பிரபாகரன்.

வல்வெட்டித்துறை திரும்பியதும் 7 நண்பர்களையும் சந்திக்கிறார். சரி ஆயுதம் வருகிற நேரத்தில தானா வரும். முதலில போராட மனதையும் உடம்பையும் பலப்படுத்த வேண்டும் என சொல்கிறார்,

அந்த நேரத்தில் போலீஸும் இராணுவமும் தமிழ் இளைஞர்களை கைது செய்தால் எப்படி கொடுமை செய்யும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆக அதற்காக தங்களை தயார் படுத்த அந்த 7 இளைஞர்களும்
முடிவு செய்கிறார்கள். காலையில் சாக்குப்பைகளுக்குள் உள்ளே அமர்ந்து கட்டிக்கொள்வார்கள் அப்படியே மாலை வரை வெயிலில் கிடப்பார்கள். மிளகாயை நிலத்தில் பரப்பி அதன் மீது வெயிலில் படுத்துக்கொள்வார்கள். நகங்களின் இடுக்குகளில் கூர்மையான ஊசியால் குத்திக்கொள்வார்கள்… நாக்குகளை இரத்தம் வரும் வரை கடித்தும் குத்தியும் கொள்வார்கள்.. காரணம் இவையெல்லாம் அந்த காலத்தில் இலங்கையின் போலீஸ் சித்திரவதைகள்…

அதே சமயம் அந்த நேரத்தில் 25 பேர் அடங்கிய தமிழர் விடுதலைக்குழு ஒன்றும் தோற்றம் பெற்று இருந்தது. அதுதான் குட்டிமணி-தங்கத்துரையின் போராட்ட குழு. அந்த 25 பேர் கொண்ட குழுவுக்கும் பிரபாகரனின் 7 பேர் கொண்ட் குழுவுக்கும் சம்மந்தம் இல்லை.. அது வேறு குழு இது வேறு குழு. ஆனால் குட்டிமணி தங்கதுரையும் பிரபாகரன் பிறந்த அதே ஊரைச்சேர்ந்தவர்கள்தான். அந்த வகையில் சகலருக்கும் இடையில் பழக்கம் இருந்தது, அதனால் ஒன்றாக இணைந்து பயிற்சி எடுக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு தொடக்கம்.. பிரபாகரனுக்கு 15 வயது. அப்போதுதான் தங்கதுரை 2 துப்பாக்கிகளை வாங்கினார்.. 25 பேர் கொண்ட குழுவுக்கு பயிற்சி கொடுக்கவும் துப்பாக்கிகளை தாமாக தயாரிக்கவும் அந்த துப்பாக்கிகளை வாங்கினார் தங்கதுரை.

அதன்படி துப்பாக்கி தயாரிக்கும் வேலை கண்ணாடி பத்மநாதனிடமும் பிரபாகரனிடமும் வழங்கப்படுகிறது…. மாலை நேரம் வழக்கமாக சந்திக்கும் வீட்டின் பின் புறம் பிரபாகரனும் கண்ணாடி பத்மநாதனும் திருப்புலி சுத்தியலுடன் வந்து அமர்கிறார்கள். கண்ணாடி பத்மநாதன் ஏற்கனவே ரேடியோ மெக்கானிக். என்பதனாலும் பிரபாகரன் ஆயுதப்பிரியன் என்பதாலும் எதையும் உன்னிப்பாக கவனிக்கும் திறன் இருந்ததாலும் இருவரும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

துப்பாக்கியை அக்குவேர் ஆணி வேராக பிரித்து போடுகிறார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே அதை மீண்டும் பூட்டி பழைய நிலைக்கு கொண்டுவருகிறார்கள்.. அதிலிருந்து தமிழீழத்தின் துப்பாக்கி மெக்கானிக் என்ற பெயரும் பெறுகிறார்கள்.

சரி ஆயுதப்பயிற்சிக்கு துப்பாக்கி மட்டும் இருந்தால் போதுமா. துப்பாக்கிக் குண்டுகளுக்கு எங்கே போவது??. அது ஒன்றும் பெரிய விடயமே அல்ல. துப்பாக்கி செய்யத்தெரிந்த நம் தமிழர்களுக்கு துப்பாக்கிக்குண்டு செய்வது முடியாதா என்ன?.. ஆரம்பத்தில் தீப்பெட்டியின் மருந்தைக்கொண்டும் அதன்பின்பு பட்டாசுகளில் மருந்தைக்கொண்டும் சாதாரண துப்பாக்கிக்குண்டுளை தயார்க்கிறார்கள் போராளிகளுக்கு இப்போது துப்பாக்கியும் குண்டுகளும் தயாரிக்க பழக்கமாகிவிட்டது..

பயிற்சியை ஆரம்பிக்கிறான் 16 வயது சிறுவனான பிரபாகரன்.

இது ஒருபுறமிருக்க 1970 இல் இலங்கை அரசியலும் பெரும் மாற்றம் அடைகிறது. 5 ஆண்டுகள் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியின் பின்பு சிறீமாவோ மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றுகிறார்.

மீண்டும் உக்கிரமாக தமிழர்களை அடக்குகிறார் சிறீமாவோ..

பொறியியலும் மருத்துவத்திலும் தமிழ் மாணவர்கள் சிறந்து விளங்கிய காலம் அது. அதுதான் சிங்களவனுக்கு பொறுக்கவில்லை அப்போது தமிழ் பேசும் முஸ்லிமான பதியுதீன் தான் கல்வி அமைச்சர்.. தரப்படுத்தல் என்னும் சட்டம் மூலம் தமிழனின் கல்வி, காணி,, மொழி, மதம் என அனைத்திலும் அடித்தது சிங்கள அரசு. அதற்குன் உடந்தை அந்த பதியுதீன்.

தமிழ் மாணவர்கள் வெகுண்டெழுந்தனர்… பொன்னுத்துரை சத்தியசீலன் தலமையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இனி தமிழரசுக்கட்சியை நம்பிப்பயனில்லை என்ற முடிவில் 1970 நவம்பர் மாதம் “சத்தியசீலன்” தலைமையில் “தமிழ் மாணவர் பேரவை” என்னும் அமைப்பை உருவாக்கினர்.. அந்த அமைப்பில் ஆரம்பத்தில் பள்ளி பரீட்சைகளை முடித்தவர்கள் மட்டுமே சேரலாம் என்ற சட்டம் இருந்தது அதனால் 10ம் வகுப்பு வரை படித்த பிரபாகரனால் அந்த அமைப்பில் சேர முடியவில்லை… பின் நாட்களில் அந்த சட்டம் தளர்த்தப்பட அந்த இயக்கத்திலும் சேர்கிறார் பிரபாகரன்……

அடுத்த பதிவில் புலிகள் இயக்கத்தின் தோற்றம் பற்றி பதிவிடப்படும்.

1 கருத்து:

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.